தலைப்புச் செய்திகள் :
Home » , » டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை! ஜனநாயக மக்கள் முன்னணி

டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை! ஜனநாயக மக்கள் முன்னணி

Written By Unknown on Aug 9, 2012 | 11:23 PM

தமிழகத்தில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளது.

எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனநாயக மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என இன்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டம், முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அரசியல்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக அமைப்புகளின் எல்லாவித நடவடிக்கைககளும் இலங்கையில் தமிழரை கொடும் ஆட்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

எனவே தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைககளை விமர்சனம் செய்வது இல்லை என்பது நமது கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் நிலைப்பாடு ஆகும்.

மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்பிலும், உலகத் தமிழ் அரசியல் பரப்பில் திராவிட முன்னேற்ற கழகம் வகிக்கும் பாத்திரம் தொடர்பிலும் நாம் நல்லெண்ணங்களை கொண்டுள்ளோம்.

எனினும், போர் நடைபெற்ற காலத்தில் ஆட்சியிலிருந்த திமுக அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும், தற்போதைய போருக்கு பிந்திய இந்த காலகட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் பயன்பாடு குறித்தும் பாரிய முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவைபற்றி நாம் விரிவான பகிரங்க விவாதங்களை நடத்த விரும்பவில்லை. எனினும் இவை தொடர்பில் எமது அரசியல்குழுவில் விரிவாகவும், கவனமாகவும் ஆய்வு செய்த நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் எமது இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.

அதேவேளையில், இலங்கை தமிழர்களது தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கூட்டாக ஒரு தேசிய மாநாட்டை நடத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அதன்மூலம், தமிழகம் தனது ஒருமித்த குரலின் மூலமாக இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலங்கை தமிழ் உடன்பிறப்புகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவின் மனசாட்சியையும், உலகத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்ப வேண்டும்.

அந்த ஒரு செயல்பாட்டில் தமிழகத்தின் மாணவர், இளைஞர் மற்றும் சமூக அமைப்புகளும் உள்வாங்கப்பட வேண்டும். இத்தகைய ஒரு அனைத்து கட்சிகளின், அமைப்புகளின் மாநாடு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்படுமானால் அதில் நமது கட்சி உட்பட அனைத்து இலங்கை தமிழ் கட்சிகளும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றும் சூழல் ஏற்படும் என நாம் அறிவிக்க விரும்புகிறோம்.

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் வாழ்வுரிமைகள் தொடர்பில், இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உலகின் எந்த ஒரு மேடைக்கும் சென்று உரையாடல்களை மேற்கொள்வதற்கும், தமிழக மற்றும் எந்த ஒரு உலக அரசியல் அமைப்புகளுடனும் இணைந்து நமது மக்களின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னேடுப்பதற்கும் உள்ள உரிமையை நாம் முழுமையாக வலியுறுத்துகிறோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தமிழ் கட்சிகள் அறிவித்துவிட்ட நிலையிலும், இந்நாட்டின் சிங்கள பௌத்த இன - மதவாத கட்சிகளே, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தடையாக இருக்கின்றன. இந்த கட்சிகளே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிரான இன-மத தாக்குதல்களுக்கு பின்னணியிலும் இருக்கின்றன.

இந்த இன - மதவாத அமைப்புகளை இலங்கை அரசாங்கமே தட்டி கொடுத்து வளர்க்கின்றது. உள்நாட்டில் தீர்வுகள் இல்லை என்ற நிலையிலேயே, நாம் வெளிநாடுகளின் கவனத்திற்கு எமது பிரச்சினைகளை கொண்டு செல்கிறோம்.

எனவே தமிழ் அரசியல் கட்சிகள் வெளிநாடுகளுக்கு சென்று, எமது பிரச்சினைகள் தொடர்பில் உரையாட கூடாது என்ற இந்த இன-மதவாத அமைப்புகளின் கருத்துகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
 

Creating and Maintenance : Chanumaa
Copyright © 2012. ஆர்வலன் - All Rights Reserved